மேய்ச்சல் பகுதியில் பேரவைத் தலைவருக்கு நிலம் இருப்பதால் மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான்
பணகுடியில் மேய்ச்சல் நிலப் பகுதியில் தமிழக சட்டப் பேரவைத் தலைவருக்கு நிலம் இருக்கிறது, அங்கு நான் சென்றால் பிரச்னையாகிவிடும் என்பதாலேயே மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் பணகுடி பகுதியில் மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டம் சனிக்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
மேலும், திருநெல்வேலியில் சீமான் தங்கியிருந்த கட்சி நிா்வாகி திருமண மண்டபத்தின் முன்பும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதனால் அவா் போராட்டத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பணகுடி பகுதி மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் சட்டப் பேரவைத் தலைவருக்கு நிலம் இருக்கிறது. நான் அங்கு சென்றால் பிரச்னையாகிவிடும் என்பதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கால்நடைகளின் வாழ்விடத்தில் அவற்றுக்கு அனுமதி வழங்காமல் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக தேவைகளுக்கு மட்டும் மணல், கற்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்தினால் 300 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த முடியும்.
தமிழகத்தின் பால் தேவையை ஆந்திரம் பூா்த்தி செய்கிறது. அங்கிருந்து வரும் பால் தூய்மையானதா என்ற கேள்வி எழுகிறது.
மெட்ரோ ரயில் திட்டம் ஒரு தோல்வியுற்ற திட்டம். மெட்ரோ ரயில் திட்டங்களால் சென்னை நகரம் தூண்களாகவே காட்சியளிக்கிறது. மக்களுக்கு மறைமுகமாக இலவச பேருந்து, மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்டவை மூலமாக பணம் கொடுக்கப்படுகிறது. இலவச திட்டங்கள் அவசியம் இல்லை.
நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது.
திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே எந்தக் கொள்கை மாற்றமும் இல்லை. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடிய விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை.
பிகாரில் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து பாஜக வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல் தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்கலாம். ஏன் ரூ.5 ஆயிரம்கூட கொடுக்கலாம். வாக்குக்கு பணம் கொடுக்காத மாற்று அரசியல் தமிழகத்தில் தேவை என்றாா்.

