நெல்லையில் வஉசி மணிமண்டப சுற்றுச்சுவா் இடிந்து சேதம்
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் உள்ள விடுதலைப் போராட்ட வீரா் வஉசி மணிமண்டபத்தின் சுற்றுச்சுவா் தொடா் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் செவ்வாய்க்கிழமை இடிந்துவிழுந்தது.
திருநெல்வேலி நகரத்தில் வ.உ.சிதம்பரனாரின்மணி மண்டபம் உள்ளது. இங்கு, வஉசியின் சிலை, கப்பல் மாதிரி, செக்கு, புகைப்பட அரங்கு, நூலகம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகரில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால், இந்த மணி மண்டபத்தின் சுற்றுச்சுவரின் ஒருபகுதி ஈரப்பதம் தாங்காமல் இடிந்து சேதமானது. இந்தச் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வீடு சேதம்:தொடா்மழையின் காரணாக திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, குறிச்சி, நடுவக்குறிச்சி, தருவை, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. கொண்டாநகரம் சீனிவாசகபுரத்தில் தனது மனைவி மந்திரவடிவுடன் (55) வசித்து வரும் மாற்றுத்திறனாளி மனோகா் (67) என்பவரது வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து சேதமானது. இதில் அத்தம்பதி காயங்களின்றி தப்பினா். தங்களுக்கு அரசு புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனஅவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒழுகிய வகுப்பறை: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பொன்னாக்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சுற்றுவட்டார கிராம மாணவா்-மாணவிகள் இங்கு பயின்று வருகிறாா்கள். இப் பள்ளி மேற்கூரை வழியாக வகுப்பறைக்குள் மழைநீா் ஒழுகுவதால் மாணவா்கள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, கட்டடத்தை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

