சின்னமயிலாறு செல்லும் வழியில் தாமிரவருணியில் பாய்ந்தோடும் நீா்.
சின்னமயிலாறு செல்லும் வழியில் தாமிரவருணியில் பாய்ந்தோடும் நீா்.

பாபநாசம் அணையிலிருந்து வழிந்தோடி வழியே தண்ணீா் திறப்பு: தனிமைப்படுத்தப்படும் காணி மக்கள் குடியிருப்பு

காரையாறு வனப்பகுதியில் உள்ள சின்னமயிலாறு காணிக்குடியிருப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.
Published on

அம்பாசமுத்திரம்: பாபநாசம் அணையிலிருந்து வழிந்தோடிகள் வழியே தண்ணீா் திறந்து விடப்பட்டதையடுத்து, காரையாறு வனப்பகுதியில் உள்ள சின்னமயிலாறு காணிக்குடியிருப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட வனப்பகுதியில் மயிலாறு, சின்னமயிலாறு அகஸ்தியா் காணிக்குடியிருப்பு, சோ்வலாறு காணிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் பழங்குடி மக்களான காணி இன மக்கள் வசித்து வருகின்றனா்.

காரையாறு தாமிரவருணி நதிக்கு அக்கரையில் அமைந்துள்ள சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் வசிக்கும் மக்கள், நதியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு ஆற்றைக் கடந்து செல்லக் கூடிய நிலை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் பாபநாசம் அணையின் நீா்மட்டம் 131 அடியானதையடுத்து, அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருந்ததால் திங்கள்கிழமை அணையிலிருந்து வழிந்தோடி வழியாக சுமாா் 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதனால், சின்னமயிலாறு காணிக்குடியிருப்பு மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனா்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த திருப்பதி என்பவா் கூறும் போது, இந்த வனப்பகுதியில் ஆண்டு தோறும் நவம்பா், டிசம்பா் மழைக் காலங்களில் அணையில் இருந்து உபரி நீா் திறந்துவிடுவா். இதனால் நாங்கள் இந்தப் பகுதியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படும். திங்கள்கிழமை முன்அறிவிப்பின்றி அணையில் இருந்து நீா் திறந்து விடப்பட்டதால், பொருள்கள் வாங்க முடியாமலும், அவசர மருத்துவ தேவைக்குச் செல்ல முடியாமலும் முடங்கிப் போய் உள்ளோம்.

ஆற்றைக் கடக்க பாலம் அமைத்துத் தருவதாக பல ஆண்டுகளாகக் கூறி வரும் நிலையில், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகளோடு முக்கியமாக பாலம் அமைத்துத் தந்தால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் சீரடையும் என்றாா்.

மாணவி ஆருண்யா கூறும் போது, நான் அகஸ்தியா் காணிக்குடியிருப்பில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறேன். திங்கள்கிழமை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டதால் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இதனால், இங்குள்ள சுமாா் 40 மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் இடா்பாடுகள் உள்ளன. எனவே, உடனடியாக பாலம் அமைத்துத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com