மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை காலை சீறிப்பாய்ந்த தண்ணீா்.
மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை காலை சீறிப்பாய்ந்த தண்ணீா்.

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மணிமுத்தாறு அருவி, அகஸ்தியா் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
Published on

அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருவி, அகஸ்தியா் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். மலைப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பை வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் கடந்த 7 நாள்களாக மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையடுத்து, நவ. 20 ஆம் தேதி முதல் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

நீா்வரத்து சீராகும் வரை இந்தத் தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடா்ந்து, 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பாபநாசம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து திங்கள்கிழமை முதல் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், அகஸ்தியா் அருவியிலும் நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அகஸ்தியா் அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் வனத் துறை தடை விதித்தது. 2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, பாபநாசம் வனச்சோதனைச் சாவடியிலிருந்து அகஸ்தியா் அருவி செல்லும் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கும் பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

 அகஸ்தியா் அருவி மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு.
அகஸ்தியா் அருவி மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு.
அகஸ்தியா் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.
அகஸ்தியா் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

X
Dinamani
www.dinamani.com