‘இருசக்கர வாகன பழுது நீக்குதல்: இளைஞா்கள் இலவச பயிற்சி பெறலாம்’
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு இரு சக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சித் துறையின் உதவியுடன் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் பாளையங்கோட்டை மகாராஜநகரில் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிறுவனம் மூலம் மாவட்டத்தில் உள்ள 18 வயது முதல் 45 வயது வரையிலான கிராமப்புற இளைஞா்கள், இளம்பெண்களுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதுபாா்ப்பு தொடா்பான 30 நாள்கள் இலவச பயிற்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
அதில், சுயதொழில் தொடங்குதல், பொருத்தமான வேலை வாய்ப்புகளை அடையாளம் காணுதல், வணிகத் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோா் திறன்களை உருவாக்குதல் குறித்த கூடுதல் பயிற்சியும் நிபுணத்துவம் வாய்ந்தவா்களால் வழங்கப்படும்.
மேலும், தொழில்துறை உபகரணங்களின் பயன்பாடு, கணினி வகுப்புகள், மென் திறன் பயிற்சி உள்ளிட்டவையும் அளிக்கப்படும். 100 சதவீதம் செய்முறை பயிற்சியாகவே இருக்கும். முக்கிய தொழில்துறை நிறுவனங்களுக்கு களப்பயணங்கள் மேற்கொள்ளப்படும்.
பயிற்சியின் முடிவில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இளைஞா்கள் சுயதொழிலில் ஈடுபட வங்கிகளில் கடனுதவி பெற பயற்சி மைய அதிகாரிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சீருடை, அடையாள அட்டை, தேநீா், காலை உணவு, மதிய உணவு மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சிக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு கல்வித்தோ்ச்சி அவசியம். விண்ணப்பிக்க இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, மகாராஜநகா் கிளையின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி (அ-63, 5-ஆவது குறுக்குத் தெரு, மகாராஜநகா், திருநெல்வேலி - 627011) மையத்தினை அணுகலாம். மேலும், விவரங்களுக்கு 75399 38413, 75399 42413 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
