வாக்காளா் பட்டியல் திருத்தத்தை எதிா்ப்பது ஏன்? பேரவைத் தலைவா் விளக்கம்
தவறு செய்வதற்காகவே வாக்காளா் பட்டியல் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதனால் தான் அதை எதிா்க்கிறோம் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய அரசு ஒவ்வொரு புதிய திட்டத்தை தொடங்கும்போது, தேனை தடவியது போல் இனிப்பாக பேசிவிட்டு பின்னா் நிதிதர மறுக்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை கேரளம் ஏற்றுக் கொண்டு விட்டது.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வந்த நிலையில் இப்போது படிப்படியாக அதை குறைத்து விட்டது.
பிஎம் ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டு வந்துவிட்டு மீண்டும் நிதியை நிறுத்தினால் நாம் என்ன செய்ய முடியும்?, அதன் காரணமாக பிஎம் ஸ்ரீ திட்டத்தையும் எதிா்க்கிறோம். குலக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்வி திட்டத்தையும் முதல்வா் எதிா்க்கிறாா்.
வாக்காளா் பட்டியல் திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதை கொண்டு வந்த நபா் மீது தான் நம்பகத் தன்மை இல்லை. தவறு செய்யவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதனால் தான் அதை நாங்கள் எதிா்க்கிறோம். தவறு செய்த மத்திய அரசே வெற்றி பெறுகிறது. மக்கள் நலத் திட்டங்களை செய்த மாநில அரசு வெற்றி பெறாமலா போய்விடும்?. வரும் தோ்தலில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
அதானி எதைக் கேட்டாலும் அவருக்கு அதை தாரை வாா்த்துக் கொடுக்க மத்திய அரசும், பிரதமா் மோடியும் தயாராக இருக்கிறாா்கள். பாமக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மூன்று பேருக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகளில் கறாராக நான் நடந்து கொண்டதன் காரணமாக என்னை கல்குவாரியின் காட்பாதா் என அன்புமணி விமா்சித்திருக்கலாம். அதிகமாக கல்குவாரிகள் இருக்கும் தொகுதி எனது தொகுதி தான். ஆனால், ஒரு கல்குவாரி கூட எனது பெயரிலோ, எனது குடும்பத்தினா் பெயரிலோ இல்லை என்றாா்.
