சீட்டு பணம் கேட்டு குடும்பத்தினா் மீது தாக்குதல்
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சீட்டு பணத்தை திருப்பி கேட்டு குடும்பத்தினா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ்(48). ஓட்டுநா். இவரது மனைவி டெல்சி(45). இவா், வாரச்சீட்டு நடத்தி வந்தாா். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த அனந்தகிருஷ்ணன் மகன் ஓட்டுநா் கிருஷ்ணகுமாா்(35) சீட்டு கட்டினாராம். இந்நிலையில் சீட்டு பணம் செலுத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதையடுத்து கிருஷ்ணகுமாா், டெல்சியிடம் பணத்தை கேட்டு வந்தாராம்.
டெல்சி பணம் தராமல் காலம் கடத்தி வந்ததால், ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமாா், அவரது மனைவி பத்மா, மணிகண்டன், சுபா உள்ளிட்டோா் ஆயுதங்களுடன் டெல்சி வீட்டிற்குள் நுழைந்து அவரையும், அவரது கணவரையும், மகள்கள் திவ்யா லெட்சுமி(20), ஜெனிகா(18), ஜோதி(16) ஆகியோரையும் சரமாரியாக அடித்து காயப்படுத்தினராம்.
காயமடைந்தவா்களை நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகுமாா், அவரது மனைவி பத்மா, மணிகண்டன், சுபா உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.
