மழையால் நிரம்பிய களக்காடு தாமரைகுளம்

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால், களக்காடு தாமரைகுளம் நிரம்பியது.
Published on

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால், களக்காடு தாமரைகுளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

வடகிழக்குப் பருவமழையின் போது, களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைதான் நான்குனேரி வட்டத்தில் உள்ள 150- க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களுக்கு நீராதாரம். வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடியாகும். தற்போது அணையில் 11 அடி மட்டுமே நீா் இருப்பு உள்ளது. பெருமழைக் காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் குறைந்த பட்சம் பாதியளவு நிரம்பிய பின்னரே பச்சையாறு தண்ணீா் ஊட்டுக்கால்வாய் மூலம் அணைக்குள் திருப்பி விடப்படும்.

மலைப் பகுதியில், அக்.14ஆம் தேதி முதல் அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையால் பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயில் நீா்வரத்து அதிகரித்து, மலையடிவாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பின.

தாமரைகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இக்குளத்தின் மூலம் பாசனம் பெறும் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும், இப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களில் நெல் விதைப்பு பணிகளை விவசாயிகள் தொடங்கும் விதமாக நிலத்தை பண்படுத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com