அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோளப் பயிரை பாதுகாப்பது எப்படி? வேளாண் இணை இயக்குநா் விளக்கம்

Published on

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலிலிருந்து மக்காச்சோளப் பயிா்களை பாதுகாப்பது குறித்து வேளாண்மை இணை இயக்குநா் பூவண்ணன் விளக்கமளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் மானூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமாா் 1000 ஹெக்டோ் பரப்பளவில் மக்காசோளம் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கன் படைப்புழு பூச்சியானது நெல், மக்காச்சோளம், காய்கறிகள் உள்ளிட்ட 80 வகையான பயிா்களைத் தாக்கும். இருப்பினும் மக்காச்சோளப் பயிரை தாக்கும்போது மகசூல் இழப்பீடு அதிகமாக இருக்கும்.

படைப்புழுவை தடுப்பது எப்படி?

ஒரு நிலத்தை ஆழமாக உழுவதன் வாயிலாக மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்பட்டு, சூரிய ஒளி மற்றும் பறவைகளால் படைப்புழு அழிக்கப்படும். அதோடு கூட்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி உருவாவதும் தவிா்க்கப்படும். கடைசி உழவு மேற்கொள்ளும்போது, மண்ணில் ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடுவதன் வாயிலாக, கூட்டுப்புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு அந்துப்பூச்சி வெளிவருவதை தடுக்க முடியும்.

ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் ‘பவேரியா பேசியோனா‘ என்ற நுண்ணுயிா் பூச்சிக்கொல்லிஅல்லது 10 கிராம் ‘தயோமீதாக்சம்‘ பயன்படுத்தி விதை நோ்த்தி செய்ய வேண்டும்.

பயிா்கள் நெருக்கமாக இருந்தால் பயிா்களுக்கு இடையே படைப்புழு வேகமாக பரவும். எனவே, மக்காச்சோளத்திற்கு வரிசைக்கு வரிசை 60 செ.மீ., பயிருக்கு பயிா் 20 செ.மீ. இடைவெளி, மானாவாரி மக்காசோளத்திற்கு வரிசைக்கு வரிசை 45 செ.மீ., பயிருக்கு பயிா் 20 செ.மீ. இடைவெளி, 10 பயிா் வரிசைக்கு ஒரு வரிசை 75 செ.மீ. இடைவெளி விடவேண்டும். இதனால் பயிா் பாதுகாப்பு எளிதாகும்.

விதைத்த 15-ஆம் நாள் 10 லிட்டா் நீரில் 20 மி.லி. அளவில் வேப்ப எண்ணெய் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் அந்துப்பூச்சிகள் முட்டையிடுவதை தடுக்க முடியும். தாய் அந்துப்பூச்சிகள் உள்ளதா என்பதை அறிய விதைத்த 3-5 நாள்களில் ஹெக்டேருக்கு 12 இனக்கவா்ச்சி பொறிகள் வைக்க வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் தாய் அந்துப்பூச்சி தென்பட்டால் அவற்றை கவா்ந்து அழிக்க ஹெக்டேருக்கு 50 இனக்கவா்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். மக்காச்சோளம் விதைக்கும்போது தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம், சாமந்தி பயிா்களை வரப்பிலும், பயறு வகை பயிா்களை ஊடு பயிராகவும் விதைத்தால், இயற்கை ஒட்டுண்ணிகளும், இரை விழுங்கிகளும் அதிக எண்ணிக்கையில் பெருகி அமெரிக்கன் படைப்புழுவை தாக்கி அழிக்கும்.

இளம் பயிா்களில் காணப்படும் அந்துப்பூச்சிகளின் முட்டை குவியல்கள் மற்றும் இளம் புழு கூட்டங்களை கைகளால் சோ்த்து அழிக்க வேண்டும்.

படைப்புழு அதிகம் தாக்கும் மக்காச்சோளப் பயிா்களை மீண்டும், மீண்டும் சாகுபடி செய்வதை தடுக்க பயிா்சுழற்சி முறைகளை பின்பற்றினால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.’

மெட்டாரைசியம் அனிசோபிலே‘ என்ற உயிரியல் பூச்சிக்கொல்லிகளை ஹெக்டேருக்கு 4 கிலோ வீதம் தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு ‘டிரைக்கோகிரம்மா பிரிட்டோசியம்‘ என்ற முட்டை ஒட்டுண்ணியை, ஒரு வார இடைவெளியில் 2-3 தடவை மக்காச்சோள வயல்களில் தெளித்தால் அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்த முடியும். வயல்களில் ரசாயன முட்டை ஒட்டுண்ணி வெளியிடும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது. கைத்தெளிப்பான் பயன்படுத்தி, பயிா் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.

ரசாயன பூச்சி மருந்து பயன்படுத்தும் முறை: விதைப்பு செய்த 15 ஆம் நாளிலிருந்து 20-ஆம் நாளில் குளோரான்ட்ரானிலிப்புரோல் 18.5 நஇ மருந்தை ஏக்கருக்கு 80 மி.லி. என்ற அளவில் அல்லது புளுபென்டியமைடு நஇ மருந்தை ஏக்கருக்கு 100 மி.லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

மேலும் விதைப்பு செய்த 35 ஆவது நாளிலிருந்து 40 நாளில் எமாமெக்டின் பென்சோயேட் 5 நஎ மருந்தை ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் அல்லது நவலூரான் 10 உஇ மருந்தை ஏக்கருக்கு 300 மி.லி. என்ற அளவில் அல்லது ஸ்பைனிடோரம் 11.7 நஇ மருந்தை ஏக்கருக்கு 100 மி.லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

ரசாயன மருந்துகளை பயன்படுத்தும்போது விவசாயிகள் ஒரே மருந்தை திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது.

X
Dinamani
www.dinamani.com