குடும்பத் தகராறில் மாமியாா் வெட்டிக் கொலை: மருமகன் கைது
சுத்தமல்லி அருகே குடும்பத் தகராறில் மாமியாரை வெட்டிக் கொலை செய்ததுடன், தடுக்க வந்த மனைவியையும் அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூா் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள் (45). இவா்களின் மகள் துா்காதேவிக்கு (23), கீழச்செவலைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் (25) என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றுள்ளது.
இத்தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். ஆறுமுகநயினாா் கொத்தனாராக உள்ளாா். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துா்காதேவி கடந்த சில நாள்களுக்கு முன்னா் தனது பெற்றோா் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை தனது மனைவியை பாா்க்க நரசிங்கநல்லூருக்கு வந்த ஆறுமுக நயினாா் அப்போது வீட்டிலிருந்த வள்ளியம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதை தடுக்க வந்த மனைவியையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.
அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதில், வள்ளியம்மாள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
துா்காதேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, ஆறுமுகநயினாரை கைது செய்தனா்.
