கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: நவ.21-க்கு ஒத்திவைப்பு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை நவ.21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய காவல் உதவிக் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் உள்பட 14 போ் மீது 4 வழக்குகளை சிபிசிஐடி போலீஸாா் பதிவு செய்தனா்.
திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில், இந்த வழக்கை மனித உரிமை மீறலாகக் கருதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து 7 முறை நடைபெற்ற விசாரணைகளில் பல்வீா்சிங் 5 முறை ஆஜராகவில்லை. இந்நிலையில், நீதிபதி கே.சத்யா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது பல்வீா்சிங், காவல் ஆய்வாளா் ராஜகுமாரி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. மற்ற 12 காவலா்களும் ஆஜராகினா். இதையடுத்து, வழக்கு விசாரணையை நவ.21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
