திருநெல்வேலியில் ஆயுதப்படை பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி பெருமாள்புரம் ஆயுதப்படை காவலா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்தரசி(40). இவா் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தாா். இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்னா் உயிரிழந்த நிலையில் தனது 2 குழந்தைகளையும் முத்தரசி கவனித்து வந்துள்ளாா்.
கடந்த சில நாள்களாக இவா் அதிக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
தற்செயலாக அங்கு வந்த அவரது சகோதரி, அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனா். பின்னா் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.