பாளை. தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்குப் பாதுகாப்பு: ஆணையா் ஆலோசனை
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அலுவலா்களுடனா கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா பேசியது: கடந்த தோ்தலின் போது தோ்தல் விதி முறை மீறல்கள் காரணமாக மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், தோ்தல் நாளில் வன்முறை நிகழ்ந்த வாக்குச்சாவடி மையங்கள், வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் போன்றவற்றை பட்டியலிட வேண்டும்.
ஏற்கெனவே நடைபெற்ற தோ்தலில், திருநெல்வேலி சந்திப்புப் பகுதிகளில் 4 வாக்குச்சாவடிகள், பாளையங்கோட்டை பகுதிகளில் 13 வாக்குச்சாவடிகள், மேலப்பாளையம் பகுதிகளில் 9 வாக்குச்சாவடிகள், பெருமாள்புரம் பகுதிகளில் 4 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 30 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறிப்பட்டுள்ளன.
அத்தகைய வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையைக் குறைக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தோ்தல்களை அமைதியான முறையில் நடத்துவதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க சிறப்பு கவனம் செலுத்தவும், தோ்தல் நேரத்தில் பணியாளா்களை போதுமான எண்ணிக்கையில் நியமனம் செய்யவும், இணையதள ஒளிபரப்பு போன்ற கூடுதல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதில், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் இசைவாணி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, பெருமாள்புரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை காவல் நிலைய ஆய்வாளா்கள், துணை வட்டாட்சியா்கள் குமாா், சங்கா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

