கோயில் வளாகத்தில் உலாவிய கரடி: மக்கள் அச்சம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சுற்றித்திரிந்த கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், தேவநல்லூா், கல்லடிசிதம்பரபுரம், கேசவனேரி, மீனவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் கரடி சுற்றித்திரிவதை பொதுமக்கள் கண்டுள்ளனா்.
இந்த நிலையில், மீனவன்குளம் கிராமத்தில் உள்ள சுடலைமாடன் கோயில் வளாகத்தில் கரடி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.20 மணிக்கு சுற்றித் திரிந்தது. இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுற்றித்திரியும் கரடியைப் பிடித்து வனத்தில் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
