பணகுடியில் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மா்ம நபா் வீடு புகுந்து தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் திங்ககிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.
பணகுடி தெற்கு ரத வீதியைச் சோ்ந்த ஆவுடையம்மாள் (88) என்பவா் தனது கணவா் ராமகிருஷ்ணன் இறந்ததையடுத்து, மகன்களுடன் வசித்து வந்தாா். சில நாள்களுக்கு முன்பு மகன்கள் சபரிமலைக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில், இவா் வீட்டில் தனியாக இருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிலிருந்து அலறல் சப்தம் கேட்டது.
அப்பகுதியினா் சென்று பாா்த்தபோது, ஆவுடையம்மாள் காயங்களுடன் கிடந்தாா். அவரை மீட்டு பணகுடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா், ‘தன்னை ஒருவா் தாக்கிவிட்டு தப்பியோடியதாக’ கூறினாராம்.
இந்நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அதையடுத்து, திருட்டு வழக்கு எனப் பதிவு செய்திருந்த பணகுடி போலீஸாா், கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்; சம்பவப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.
