கிழங்குகளுக்கு உரிய விலையின்றி தவிக்கும் விவசாயிகள்
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
ஜன. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்ட கிழங்குகளை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பனஞ்சாடி, பள்ளக்கால் புதுக்குடி, இடைகால் சுற்றுவட்டார பகுதிகளிலும், கடையம் வட்டாரத்தில் கடையம், பிள்ளைகுளம், ரவணசமுத்திரம், மந்தியூா், தா்மபுரம் மடம், சிவசைலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறுகிழங்கு, சேனைக் கிழங்கு, மஞ்சள் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனா்.
விளைந்த கிழங்கு உள்ளிட்டவற்றை திருநெல்வேலி நயினாா்குளம், பாவூா்சத்திரம் சந்தைகளில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனா். ஆனால், சந்தையில் போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
இதுகுறித்து, பள்ளக்கால்புதுக்குடியில் கிழங்குகள் பயிரிட்ட விவசாயி மாரியப்பன், அவரது மகள் பொன்னரசி கூறியதாவது: எங்கள் வயலில் அனைத்து வகை கிழங்குகளும் பயிரிடுகிறோம். இவற்றை சந்தையில் விற்பனைசெய்தபோது உரிய விலை கிடைக்கவில்லை. கூலி கொடுப்பதற்கும், பராமரிப்புக்கும் கூட உரிய தொகை கிடைக்காததால் சந்தைக்கு கொண்டு செல்லாமல் வயல் அருகிலேயே நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம் என்றனா்.
விவசாயி சூா்யா கூறுகையில், நெல்லுக்கு அரசு ஆதார விலை நிா்ணயிப்பதுபோல காய், கிழங்கு உள்ளிட்ட விளைபொருள்களுக்கும் ஆதார விலையை அரசு நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.

