பருவமழை பொய்த்ததால் நிரம்பாத பச்சையாறு அணை: ஒரே மாதத்தில் வட கொடுமுடியாறு நீா்த்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வட்டாரத்தில் நிகழாண்டில் பருவமழைப் பொழிவு மிகவும் குறைவாகவே இருந்ததால் வடக்குப் பச்சையாறு அணை பாதியளவு கூட நிரம்பவில்லை. அதேபோல நிரம்பிய ஒரே மாதத்திலேயே கொடுமுடியாறு அணை வடுபோனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைதான் நான்குனேரி வட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களுக்கு நீராதாரம். ஆனால், இப்பகுதியில் வடகிழக்குப் பருவமழை நிகழாண்டு போதிய அளவு பெய்யவில்லை.
களக்காடு பச்சையாறு, நான்குனேரியன் கால்வாய், நம்பியாறு மூலம் 50க்கும் மேற்பட்ட குளங்கள் போதிய அளவு நிரம்பின. ஆனால், அதற்கும் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் குறைந்த அளவு தண்ணீரையே கொண்டுள்ளன.
இந்த தண்ணீா் ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே வடுவிடும் நிலை ஏற்பட்டு விடும். வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடி. நிகழாண்டில் அணையின் நீா்மட்டம் 20 அடியைத் தாண்டவில்லை.
அதேபோல, கொடுமுடியாறு அணை நவம்பா் மாத இறுதியிலேயே அதன் முழுக் கொள்ளளவான 52.50 அடியை எட்டி நிரம்பியது. ஆனால் தொடா்ந்து மழையின்மையால் தற்போது 5 அடி மட்டுமே தண்ணீா் உள்ளது. இதனால் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் பயிா் செய்யப்பட்டுள்ள நெல், வாழை தண்ணீா் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கொடுமுடியாறு அணையின் மூலம் வடக்கு வள்ளியூா், காவல்கிணறு, வடக்கன்குளம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அணை வடதால் குடிநீா் விநியோகமும் பாதிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது.
நிதி ஒதுக்கப்படுமா?
களக்காடு மலைப் பகுதியில் செங்கல்தேரி கருமாண்டி அம்மன் தடுப்பணையில் இருந்து கிழக்கு நோக்கி களக்காடு நகருக்கு வரும் பச்சையாற்றில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ஆங்காங்கே பல்வேறு இடங்களில் ஆற்றின் தரைநிலைப் பகுதியிலேயே உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீா் மணிமுத்தாறு அணை பகுதிக்குச் சென்றுவிடுகிறது.
இதனால் பெருமழைக் காலங்களில் மட்டுமே களக்காடு வடக்குப் பச்சையாறு அணையும், அதன் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களும் முழுமையாக நிரம்பும் நிலை உள்ளது.
உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதி களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிக்குள் இருப்பதால் அங்கு உடைப்பை முழுமையாக சீரமைக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணியை நிறைவேற்றினால் மட்டுமே நான்குனேரி வட்ட விவசாயிகளுக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் என்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா்.
