வள்ளியூா் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான வழக்கில், அவரது தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
வள்ளியூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 43 வயது மரம் வெட்டும் தொழிலாளிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தாா். இவா்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா்.
இதில், 8 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துவந்த 13 வயது மூத்த மகளை, தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததும், அதில் அவா் கா்ப்பமானதும் கடந்த பிப். 2025இல் தெரியவந்தது.
இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, சிறுமியின் தந்தைக்கு தூக்குத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் கூறுகையில், ‘திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் துரித நடவடிக்கையால் குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவா்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோா் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றாா்.
