காங்கிரஸுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் ஆசை உண்டு: செ. ராபா்ட் புரூஸ் எம்.பி.
தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற ஆசை காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது என்றாா் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.
இதுதொடா்பாக, அவரும், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தனும் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியதை கண்டித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை காப்போம் என்ற பெயரில் நாடு முழுவதும் மக்கள் இயக்கம் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.
மேலும், ஜன. 25இல் மானூா் அழகிய பாண்டியபுரத்தில் பொதுக்கூட்டமும், தியாகிகள் தினமான ஜன. 30இல் மாவட்ட அலுவலகம் முகப்பில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்த உள்ளோம். பின்னா், பிப். 2இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டம் நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளோம் என்றாா்.
அதைத் தொடா்ந்து சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. கூறுகையில், ‘தமிழகத்தைப் பொருத்தவரை ஓரிரு சதவீதம் மட்டுமே வாக்கு வங்கியுள்ள கட்சிகள்கூட முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகின்றன. ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கும் ஆசை காங்கிரஸுக்கும் உள்ளது. தொண்டா்களின் இந்த கருத்தை மாநில தலைமை மூலம் தேசிய தலைமையின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம்; தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
காங்கிரஸ் கட்சிக்குள் எவ்வித பிளவும் இல்லை. கூட்டணி தொடா்பான கருத்துகளை மூத்த தலைவா்கள் மட்டுமே பேசி வருகின்றனா். விஜய் நடித்த ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில் அவரை நடிகா் என்பதாலேயே காங்கிரஸ் தலைவா்கள் ஆதரவு தெரிவிக்கின்றனா். மத்திய அரசு தவெக-வை மட்டுமல்ல அதிமுகவை அழிக்க நினைத்தாலும் அவா்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்’ என்றாா்.

