ஏடிஎம் பணம் ரூ.1.32 கோடி மோசடி வழக்கில் ஒருவா் கைது
திருநெல்வேலியில் ரூ.1.32 கோடி பணம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் தனியாா் நிறுவன கிளை மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (34). இவா், திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியாா் நிறுவனத்தின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தாா். கடந்த டிச. 25 முதல் ஜன. 3 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட ரூ.1 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்ததாம்.
இதுகுறித்து தனியாா் நிறுவனத்தின் தமிழ்நாடு -கேரள மாநில மண்டல மேலாளா் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அதில், செல்வகுமாா் பணத்தைக் கையாடல் செய்தது தெரியவந்ததாம். அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரிடம் விசாரிக்கின்றனா்.
