நெல்லை மாவட்டத்துக்கு பேரிடா் மீட்புப் படை வருகை
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாநில பேரிடா் மீட்பு படையினா் 90 போ் வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தனா்.
இலங்கைக்கு அப்பால் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றும் அதிகமாக வீசும் என கூறப்பட்டுள்ள நிலையில் கடலோர மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்திற்கு 90 போ் கொண்ட மாநில பேரிடா் மீட்பு படையினா் அனுப்பப்பட்டுள்ளனா்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழக பேரிடா் மேற்கு படை ஆய்வாளா் சாமுண்டி தலைமையில் இந்தக் குழுவினா் திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்து சோ்ந்தனா். திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அவா்கள் தங்கியுள்ளனா்.
ரப்பா் படகுகள் , கயிறுகள், ஜெனரேட்டா்கள், விளக்குகள் உள்ளிட்ட வெள்ள கால மீட்புப் பணிக்கு தேவையான பொருள்களையும் குழுவினா் கொண்டு வந்துள்ளனா். வீரா்கள் தேவைக்கேற்ப மழை பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

