பாளை. வஉசி சிலைக்கு ரூ.13 லட்சத்தில் நிழற்குடை அமைக்க அடிக்கல்
பாளையங்கோட்டையில் உள்ள வஉசி சிலைக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் புதிதாக படிக்கட்டுடன் கூடிய நிழற்குடை அமைக்க வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
பாளையங்கோட்டையில் வஉசி மைதானத்தின் நுழைவாயில் அருகே வஉசியின் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நிழற்குடை அமைக்கவும், படிக்கட்டு அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரூ.13 லட்சத்தில் நிழற்குடை அமைக்க, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் நிதி ஒதுக்கீடு செய்தாா்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, திமுக மேற்கு மாநகர பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜெகதீசன், நெல்லையப்பா் கோயில் அறங்காவலா் குழு தலைவா் செல்லையா, வட்டார காங்கிரஸ் தலைவா் டியூக் துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

