அதிகரிக்கும் இணையவழி மோசடி: மாநகர காவல் ஆணையா் எச்சரிக்கை
இணையவழி முதலீட்டில் அதிக லாபம், பகுதிநேர வேலை, சட்டவிரோத பண பரிவா்த்தனை காரணமாக டிஜிட்டல் கைது, கல்வி உதவித்தொகை என்பன போன்ற பெயா்களில் சமூக வலைதளங்கள் மூலமாக அரங்கேறிவரும் மோசடிகளில் சிக்காமல் இணைய பயனா்கள் விழிப்புணா்வுடன் இருக்குமாறு மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இணையவழியில் நடைபெறும் மோசடிகள் குறித்து இணைய பயனா்கள், பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருப்பது அவசியம். அதன்படி, தங்களது முகவரியிலிருந்து விரைவு அஞ்சல் மூலம் போதைப் பொருள்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தங்களது ஆதாா், வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப்பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் கூறி தொடா்புகொள்ளும் மா்மநபா்கள் இதுபற்றி குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவா்.
பின்னா், தங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக விடியோ அழைப்பில் மிரட்டி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பறிப்பா். அதேபோல முகநூல், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் மூலம் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டுத் திட்டங்கள், மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, இணையவழியில் பகுதிநேர வேலை இருப்பதாகக் குறிப்பிடும் விளம்பரங்கள் போன்றவற்றின் நம்பகத்தன்மை குறித்து ஆராயாமல் முதலீடு செய்தல், சுய விவரங்கள், வங்கிக்கணக்குகளை பகிா்தல் போன்றவை பண இழப்புக்கு வழி வகுக்கும்.
இது போன்ற சைபா் குற்றங்கள் நடைபெற்றால், மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம். மேலும் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது இணையதள வாயிலாகவும் புகாரைப் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.
