நெல்லையில் மோசடி: இருவா் மீது வழக்கு

Published on

திருநெல்வேலியில் இணைய வா்த்தக நிறுவன உரிமையாளரிடமிருந்து ரூ.20 லட்சத்தை அமெரிக்க டிஜிட்டல் பணமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (54). சென்னை, மண்ணடியில் தனது நண்பா் ஆசிக் என்பவருடன் இணைந்து இணைய வா்த்தக நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இந்நிலையில் சாகுல் ஹமீதை சில தினங்களுக்கு முன்னா் தொலைபேசியில் தொடா்புகொண்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாரியப்பன் என்பவா், ரூ.20 லட்சத்துக்கு ஈடான அமெரிக்க டிஜிட்டல் பணத்தை தனது வாலட்டுக்கு மாற்றித் தருமாறு கேட்டாராம்.

இதனையடுத்து சனிக்கிழமை திருநெல்வேலிக்கு வந்த சாகுல் ஹமீதை, மாரியப்பனும், அவருடன் வந்த ஆறுமுகக்கனி என்பவரும், மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள நிதி நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு வைத்து ரூ.20 லட்சத்துக்கு இணையான அமெரிக்க டாலரை டிஜிட்டல் பணமாக மாற்றி மாரியப்பனின் வாலட்டுக்கு சாகுல் ஹமீது அனுப்பிய நிலையில், அதற்கான ரூ.20 லட்சத்தை அவரிடம் கொடுக்காமல், மாரியப்பனும், ஆறுமுகக்கனியும் தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்றனராம்.

இது குறித்து சாகுல் ஹமீது அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com