திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் (கோப்புப் படம்)

‘இது நம்ம ஆட்டம்’ திட்ட போட்டிகள் தொடக்கம்!

Published on

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில், பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கான ‘இது நம்ம ஆட்டம்’ திட்ட விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தொடக்க விழாவில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் முரளிதரன், திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசிதாவது:

இம் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் இன்றும், நாளையும் (ஞாயிறு, திங்கள்) இது நம்ம ஆட்டம் திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. கபடி, கேரம், வாலிபால், தடகளம், கயிறு இழுத்தல் போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

ஸ்டிரீட் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), எறிபந்து (பெண்கள் மட்டும்) போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் முதல் மூன்று நிலைகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையாக முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

விளையாட்டுத் துறையில் மாணவா்-மாணவிகள் திறன் மேம்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக ஒன்றிய அளவிலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத் திட்டம் அமைந்துள்ளது. ஒன்றிய அளவில் சிறப்பிடம் பெறுபவா்கள் மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளுக்கும் தோ்வு செய்யப்பட உள்ளனா். விளையாட்டுகளில் வெற்றி- தோல்வியை கருத்தில் கொள்ளாமல் முயற்சியுடன் கூடிய பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அ.கிருஷ்ண சக்கரவா்த்தி, பாளையங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் நெல்லையப்பன், உடற்கல்வி ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com