நெல்லை மாநகராட்சிக்கு வரிகளை செலுத்த சிறப்பு வசதி
திருநெல்வேலி மாநகராடசிக்கான வரிகளை செலுத்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவை கட்டணம் மற்றும் கடைகளின் வாடகை போன்றவற்றை செலுத்துவதற்கு நிகழாண்டு அவகாசம் 31-3-2026 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆகவே, வரித்தொகைகளை செலுத்த ஏதுவாக திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து மண்டலங்களில் உள்ள கணினி வரி வசூல் மையங்கள் 31-3-2026 ஆம் தேதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுகிழமைகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் செயல்படும்.
எனவே, 2025-26 ஆண்டிற்கான மேற்படி வரிகள் மற்றும் வரியில்லா இனங்களின் வரித்தொகைகளை உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளா்ச்சி பணிகளை மேம்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

