பாபநாசம் கோயில் உண்டியல் காணிக்கையில் கையாடல்: செயல் அலுவலரிடம் விசாரணை!
பாபநாசம், உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது, கையாடலில் ஈடுபட்ட செயல் அலுவலா் மீது அறநிலையத் துறை ஆய்வாளா் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
பாபநாச சுவாமி கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, பிள்ளையாா் சன்னதி, முருகன் சன்னதி, வெளிப் பிரகாரத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அன்னதானத் திட்டத்துக்கென தனியாக ஓா் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜன. 29) இந்துசமய அறநிலையத் துறை ஆய்வாளா் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், திருவள்ளுவா் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோயில் செயல் அலுவலா் ராஜேந்திரன் உண்டியலில் இருந்து மொத்தம் ரூ. 21ஆயிரம் மதிப்பிலான ஒரு தங்கக் காசு, ஒரு வெள்ளிக்காசு, ரூ. 8,300 ரொக்கம் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் பதுக்கினராம்.
ஆனால், இதைக் கவனித்த கல்லூரி மாணவா்கள் ஆய்வாளா் கோமதியிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆராய்ந்ததில் பணம், தங்கம், வெள்ளிக் காசுகளை அவா் எடுத்தது உறுதியானது.
இதையடுத்து, ஆய்வாளா் கோமதி விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் ஆதம் அலி செயல் அலுவலரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா். அவரிடம் இருந்து காணிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

