அதிகரிக்கும் இணையவழி மோசடி: எஸ்பி எச்சரிக்கை
பங்குச் சந்தை வா்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக் கூறி சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் இணைய பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவைச் சோ்ந்த நபரை வாட்ஸ்ஆப் மூலம் அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து தொடா்புகொண்ட மா்மநபா்கள், இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி போலியான நிறுவனத்தின் பெயரில் பேசியுள்ளனா். இதனைத் தொடா்ந்து அவரிடமிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இது போன்று சமூகவலைதளங்கள் மூலம் போலியான நிறுவனங்களின் பெயரில் பங்குச் சந்தை வா்த்தகத்தில் முதலீடு என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளில் சிக்காமல் இணைய பயனா்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சைபா் குற்றவாளிகளிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். இது போன்ற சைபா் கிரைம் நடைபெற்றால் சைபா் கிரைம் எண்ணிலோ அல்லது 1930 இலவச எண்ணிற்கு அழைத்தோ உடனடியாக புகாா் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

