டெங்கு கொசு புழு ஒழிப்புப் பணி ஆய்வு: தூய்மையாக பராமரித்தவர்களுக்கு பாராட்டு

நாகர்கோவில் நகரில் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியை நகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்து

நாகர்கோவில் நகரில் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியை நகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தவர்களை பாராட்டும் விதமாக அவர்களது வீடுகளில் பாராட்டு ஒட்டுவில்லைகள் ஒட்டப்படுகின்றன.
நாகர்கோவில் நகரில், டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் விதத்தில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் நகர் முழுவதும் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில், நகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில், நகராட்சி நகர்நல அலுவலர் கிங்சால் ஐசக் முன்னிலையில்,  10, 11ஆவது வார்டு பகுதிகளில் சுகாதாரப் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வடிவீசுவரம் பெரிய தெருவில் உள்ள 3 வீடுகளில் டெங்கு கொசுப் புழு உற்பத்தி இல்லாமல் தூய்மையாக பராமரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீடுகளின் முன் பாராட்டு ஒட்டுவில்லைகளை நகராட்சி அதிகாரிகள் ஒட்டினர். நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர்கள் மாதேவன் பிள்ளை, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வுப்பணி குறித்து நகர் நல அலுவலர் கூறியது: நகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டு பகுதிகளிலும் உள்ள 1800 வீடுகளில் முதல்கட்டமாக இந்த ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் 298 கொசு ஒழிப்புப் பணியாளர்களும்,  நகர்ப்புற செவிலியர்கள் 29 பேரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது பணியை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் 8 பேர் ஆய்வு செய்கின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும் வாரம் ஒரு முறை பணியாளர்கள் ஆய்வுக்கு செல்வர்.  தொடர்ந்து 3 வாரங்கள் தூய்மையாக பராமரிக்கப்படும் வீடுகளின் முன் பாராட்டு ஒட்டுவில்லைகள் ஒட்டப்படும்.  இந்த பாராட்டு ஒட்டு வில்லைகளை நாகர்கோவில் ரோட்டரி  கிளப் ஆப் ஜெம்ஸ் நகராட்சிக்கு வழங்கியுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com