கஜா புயல்: குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை

கஜா புயல் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய  பலத்த மழை பெய்தது.

கஜா புயல் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய  பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து நின்றது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கு தெற்கே கரையை கடந்தது. இதன் காரணமாக, குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் நள்ளிரவு 12  மணிக்கு பெய்யத் தொடங்கிய  பலத்த மழை,  தொடர்ந்து காலை வரை நீடித்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. வடசேரி சின்னராசிங்கன் தெருவில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளானார்கள். பெரியராசிங்கன் தெருவில் ஓட்டு வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
பறக்கை - தெங்கம்புதூர் சாலையில் குளத்துவிளை பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. மேலும் அப்பகுதியில் இருந்து அரசுத் தொடக்கப் பள்ளியையும் மழை நீர் சூழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் அணில்குமார் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 85  மி.மீ. மழை பதிவானது. கொட்டாரம், மயிலாடி, குருந்தன்கோடு, அடையாமடை, ஆரல்வாய்மொழி, முள்ளங்கினாவிளை, மாம்பழத்துறையாறு அணைப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையின் காரணமாக தென்னந்தோப்புகள் மற்றும் வயல் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. திற்பரப்பு அருவிப் பகுதியில் பெய்த மழையினால் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பழையாறு, வள்ளியாறு, குழித்துறை ஆறுகளிலும் வெள்ளம் ஓடுகிறது. நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. ஏற்கெனவே மாம்பழத்துறையாறு அணை முழுக் கொள்ளளவான 54.12  அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும், மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 27.05 அடியாக இருந்தது. அணைக்கு 425 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 507 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.20 அடியாக உள்ளது. அணைக்கு 141 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): குருந்தன்கோடு - 83.4, நாகர்கோவில்-73, கொட்டாரம் - 72,  தக்கலை - 66,  மாம்பழத்துறையாறு அணை -  54, இரணியல் -  51.2, சிற்றாறு 2 அணை - 42,  நிலப்பாறை - 35, மயிலாடி - 33, சிற்றாறு 1 அணை -  32.2, அடையாமடை -  27, குழித்துறை -  26.2,  முள்ளங்கினாவிளை - 24, திற்பரப்பு - 21, முக்கடல் அணை - 8.6,  பேச்சிப்பாறை அணை -8.2, பெருஞ்சாணி அணை -3.4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com