மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவ மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவ மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழலாள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம்  செவ்வாய்க்கிழமை  மனு அளிக்கப்பட்டது.  
  இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.அலெக்சாண்டர் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு: , ஒவ்வொரு ஆண்டும் நவ. 21 ஆம் தேதி உலக மீனவர் தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. மீனவ மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதார உரிமைகளை பாதுகாத்திடும் வகையில்,  பாஜக தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி மீனவ மக்களின் மேம்பாட்டுக்கான தனி அமைச்சகம் உடனடியாக அமைக்க வேண்டும், அனைத்து பகுதி மீனவ மக்களையும் பட்டியல் இன வகுப்பாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் நிறுத்தம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவ மக்களை இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாக்க அதிநவீன செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய தொடர்பு சாதனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மீனவர் உரிமைகளை பாதுகாக்க நீதிபதி வேணுகோபால் ஆணைய பரிந்துரையை ஏற்று மீனவருக்கான சட்டப்பேரவைத்  தொகுதி ஏற்படுத்த வேண்டும், மீனவ கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து மீனவ 
கிராமங்களையும் முன்பிருந்தவாறு தனித்தனி கிராம ஊராட்சிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்ட வளங்களை, மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சற்றும் சாதகமில்லாத, துறைமுக வல்லுநர்களின் ஆலோசனைகளுக்கு புறம்பாக கொண்டுவர திட்டமிட்டுள்ள கோவளம், மணக்குடி பன்னாட்டு பெட்டக மாற்று முனைய திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும், மீனவர் கிராமங்களை பாதுகாத்திட கேரள மாநிலம் மூதாக்கரை திட்டம் போன்று மாவட்டம் முழுவதும் நிலைத்த நீடித்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு உத்திகள் கொண்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மீனவ மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பினை உறுதி செய்திட வள்ளம், விசைப்படகு மற்றும் உபகரணங்கள் அனைத்திற்கும் காப்பீட்டு நிறுவனங்கள் கட்டாயக்காப்பீடு செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் உயிர்காப்பு மேலுடை மற்றும் வாக்கி டாக்கி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்யும்பேர்து உயிரிழப்பு ஏற்பட்டாலோ, காணாமல் போய் கண்டுபிடிக்க முடியாத நிலை வந்து உறுதி செய்தாலோ குறைந்தபட்ச காப்பீடு தொகையாக ரூ. 10 லட்சம் உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 500 லிட்டர் மண்ணெண்ணெய் மானியமாக வழங்கிட வேண்டும், கடற்கரை கிராமங்களுக்கு சுகாதாரமான இடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மீனவ கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்பிடித்தொழில் செய்யும் மீனவர்களுக்கு போதிய அளவில் 50 சதவீதம் மானியத்துடன் வெளிப்பொருத்து 
என்ஜின்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதில் கூறப்பட்டிருந்தன.
இந்த மனுவை , மாவட்ட பொதுச் செயலர் எஸ்.அந்தோணி, மாவட்ட கெளரவத் தலைவர் என்.அந்தோணி, நிர்வாகிகள் டி.ஜேசுராஜன், பரதேசி, மங்களம் ராஜ், சோரிஸ், ஜெய மணி, மெலின், வழக்குரைஞர்  ஏ.மரிய ஸ்டீபன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com