பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் கோவை பெண் விழிப்புணர்வு பயணம்

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, நாடு முழுவதும் காரில் தனியாக சுற்றுப் பயணம் செய்து விழிப்புணர்வை

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, நாடு முழுவதும் காரில் தனியாக சுற்றுப் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் கோவையைச் சேர்ந்த பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரி வந்தார். 
கோவையைச் சேர்ந்தவர் சங்கீதா ஸ்ரீதர் (52). இவர், ஓமன் நாட்டு அரசு இணையதளத்தின் ஆலோசகராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, நாடு முழுவதும் காரில் விழிப்புணர்வு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மும்பையில் பயணத்தைத் தொடங்கிய அவர், 32 மாநிலங்கள் வழியாக சுமார் 42 ஆயிரம் கி.மீ. தொலைவைக் கடந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரி காந்தி மண்டபம் வந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெண்கள் பாதுகாப்பு, காந்திய கொள்கை, தூய்மை இந்தியா உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, நாடு முழுவதும் விழிப்புணர்வு பயணம் செய்து வருகிறேன். பல்வேறு மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வந்துள்ளேன். பயணம் தொடங்கி இது 200 ஆவது நாளாகும்.
இதுவரை பள்ளி, கல்லூரி என 3 லட்சம் பெண்களை சந்தித்து, அவர்களிடம் உரையாடியுள்ளேன். வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி, பயணம் தொடங்கிய மும்பையில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளேன். மும்பையில் பயணத்தை நிறைவு செய்யும்போது, 50 ஆயிரம் கி.மீ. தனியாக பயணம் செய்த பெருமையை நான் அடைவேன்.
தற்போது பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் பிரச்னை மிகவும் கவலையளிக்கிறது. பெண்கள் எந்த சலனத்துக்கும் ஆளாகாமல் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க வெளிநாடுகளில் உள்ளது போல, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை  வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
கன்னியாகுமரியில் இருந்து கேரளம், கர்நாடகம், கோவா மாநிலங்கள் வழியாக ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பையில் பயணத்தை நிறைவுசெய்யத் திட்டமிட்டுள்ளார் சங்கீதா ஸ்ரீதர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com