மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்: குமரியில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைப்பதற்கு எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைப்பதற்கு எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17  வருவாய் கிராமங்களில் உள்ள வனப்பகுதிகளை இணைத்து சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  இது குறித்து,  பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்,  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட வன அதிகாரி ஆனந்த் கூட்டத்தை தொடங்கிவைத்து பேசியது: குமரி மாவட்ட வன உயிரின சரணாலயத் திட்டம் 2007இல்  தொடங்கப்பட்டது. அதன்படி, 40,233 ஹெக்டேர் நிலப்பரப்பில் வன உயிரின சரணாலயம் அமைக்கும் பணிகள் தொடங்கின. 
2017இல் சரணாலய எல்லையை வரையறை செய்து, ஆறுகாணியில் இருந்து களியல், கடையாலுமூடு, சிற்றாறு, பேச்சிப்பாறை, குலசேகரம், பொன்மனை, சுருளோடு, மாம்பழத்துறையாறு, முக்கடல், தெரிசனங்கோப்பு, தெள்ளாந்தி, ஆரல்வாய்மொழி, தோவாளை, பொற்றையடி வழியாக நெல்லை மாவட்டம் பழவூர் சென்று விடுகிறது. இதில் சுங்கான்கடை பகுதியில் 4 மலைகள் இருப்பதால் கூடுதல் இடம் தேவைப்பட்டது. மற்ற இடங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. 
சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமையும் பகுதியில் குவாரிகள் அமைப்பது, தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுவது, ரசாயன தொழிற்சாலைகள் அமைப்பது போன்ற 7 வித பணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மக்கள் கட்டுமான பணிகள் மேற்கொள்ள மணல் கொண்டு செல்ல எந்தத் தடையும் இல்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்றார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி கூறியது: குமரி மாவட்டத்தில் இத்திட்டத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கெனவே, தனியார் வனக் காடுகள் சட்டத்தால்  சாதாரண மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.  சூழியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமையும் 17 கிராமங்களிலும் தனித்தனி கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றார். மேலும்,  ஆட்சியரிடம் ஒரு மனுவும் அளித்தார். 
 சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசியது: குமரியில் சூழியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் கருத்து. நிலப்பரப்பு நெருக்கடி மிகுந்த இம்மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.
மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சேகர் பேசுகையில்,   தனியார் காடுகள் சட்டத்தால் எங்கள் வாழ்வுரிமையை பறித்து விட்டீர்கள்.  தற்போது,  சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலத்தால் மலைகளில் வாழும் 43 காணி செட்டில்மென்ட்களில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு என்ன? என்றார்.
மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ரகு கூறுகையில்,  மலைப்பகுதியில் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்யாமல் எங்களுக்கு எதிரான இந்த திட்டங்களை செயல்படுத்துகிறீர்கள்.  இது வனவிலங்குகள் வசிக்கும் மாவட்டமா? மக்கள் வசிக்கும் மாவட்டமா? என்றார். 
மக்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் எந்த தொழிற்சாலைகளும் கிடையாது. விவசாயத்தை மட்டும் நம்பியுள்ளோம். இந்தத் திட்டம் விவசாயத்தை அழிக்கக் கூடியது. வனப்பகுதிகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம். ஆனால், வாழும் இடத்தை அபகரிக்க விடமாட்டோம் என்றனர்.
வனத்துறை அலுவலர் ஆனந்த் கூறுகையில், இந்த திட்டம் மக்கள் கருத்துகளின் அடிப்படையில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு,  திருத்தப்பட்ட வரைவை மத்திய அரசின் இணைய தளத்தில் வெளியிட்டு 60 நாள்கள் கால அவகாசத்துக்குப்பின்  மக்கள் கருத்தை அறிந்துதான் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். 
தமிழில் வரைவு அறிக்கை: மாவட்ட ஆட்சியர் பதிலளித்து பேசியது:  இறுதி முடிவு எடுக்கும் கூட்டம் இதுவல்ல. இங்கு என்ன பிரச்னைகள் உள்ளன?  மக்கள் கருத்து என்ன? என அறியவே இந்தக் கூட்டம்.  திட்டம் குறித்த வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் கொடுத்து 2 ஆவது கருத்துக் கேட்பு கூட்டம் கிராமவாரியாக நடத்தப்படும். அக். 2  இல்  நடைபெறும் கிராமசபை கூட்டத்திலும் கருத்து கேட்கப்படும். மக்கள்  கருத்துகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்  என்றார்.  
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ஜே.ஜி.பிரின்ஸ், ராஜேஷ்குமார், மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சேகர், என்.முருகேசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சைமன் சைலஸ், மாவட்டச் செயலர் ஆர்.ரவி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் சசிகுமார்,   பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்,   17 வருவாய் கிராம மக்கள் பங்கேற்று கருத்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com