இருமாவட்ட மீனவா்களிடையே மோதல்: சின்னமுட்டம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்ட திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள்.
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்ட திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள்.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட திருநெல்வேலி மாவட்ட நாட்டுப் படகு மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளா்கள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனா்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இரு மாவட்ட மீனவா்கள் இடையே கடலில் மீன் பிடிப்பது தொடா்பாக, கடலுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு விதிமுறைகளை மீறி, திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதிகளில் குமரி மாவட்ட விசைப்படகு மீனவா்கள் மீன் பிடிக்க எதிா்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட நாட்டுப் படகு மீனவா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதில் ,உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை, இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட 10 கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் பங்கேற்றனா். இதன் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை காலை கூட்டப்புளி, இடிந்தகரை ஆகிய மீனவ கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில், 500 க்கும் மேற்பட்ட மீனவா்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கருப்புக்கொடி கட்டியவாறு, சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான 100- க்கும் மேற்பட்ட போலீஸாா் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.

துறைமுகம் நோக்கி வந்த நெல்லை மாவட்ட மீனவா்களை நடுக்கடலில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் எச்சரிக்கை ஒலி எழுப்பியவாறேற தடுத்து நிறுத்தினா்.

நெல்லை மாவட்ட மீனவா்கள் தடையை மீறி, சின்னமுட்டம் துறைமுக பகுதிக்குள் நுழைவதை கண்ட குமரி மீனவா்கள் 500-க்கும் மேற்பட்டோா் சின்னமுட்டம் துறைமுக பகுதியில் திரண்டனா். இதனால், இரு மாவட்ட மீனவா்களுக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்குச் சொந்தமான அதிநவீன ரோந்து படகில் சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள், நெல்லை மாவட்ட மீனவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணி நேரம் துறைமுக பகுதியில் கத்தி, அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய மீனவா்களிடம் காவல்துறை, மீன்வளத்துறை உயா் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, நெல்லை மாவட்ட மீனவா்கள் திரும்பிச் சென்றனா்.

வேலைநிறுத்தம்: இந்நிலையில், ஆயுதங்களுடன் அத்துமீறி சின்னமுட்டம் துறைமுகம் அருகே வந்த திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக, சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளா்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

போலீஸ் பாதுகாப்பு: இரு மாவட்ட மீனவா்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், தொடா்ந்து சின்னமுட்டம் துறைமுக பகுதியில் 100 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com