இந்தியாவை நல்லவர்கள் ஆள வேண்டும்: காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார்

இந்தியா பொய்யர்கள் ஆளும் நாடாக இல்லாமல், நல்லவர்கள் ஆளும் நாடாக மாற வேண்டும் என்றார்

இந்தியா பொய்யர்கள் ஆளும் நாடாக இல்லாமல், நல்லவர்கள் ஆளும் நாடாக மாற வேண்டும் என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் எம்எல்ஏ.
நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரத்தின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் பேசியது: இந்திய அரசியலில் மோடியை போல  பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர் யாரும் கிடையாது. அரசியல் என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மோடி போல இருக்கக்கூடாது. பொன். ராதாகிருஷ்ணன்  ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வித்தொகை பெற்றுத்தருவேன் என்று கூறினார். ஒரு நாள் சொல்லவில்லை 5  ஆண்டுகள் கூறினார். 6 ஆவது ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சரானார். 
அமைச்சரானவுடன்  என்ன செய்திருக்க வேண்டும்?  இதுகுறித்து மக்களவையில் பேசினாரா? ஒரு நாள் கூட  வாய் திறக்காத அவர், மீண்டும் மக்களை ஏமாற்ற வருகிறார்.  நாட்டில் இருக்கும் இளைஞர்களில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைகொடுப்பேன் என்று மோடி பொய் சொன்னதுபோல், பொன்.ராதாகிருஷ்ணனும் கூறினார்.  பொய்யர்கள் ஆளும் நாடாக இந்தியா இருக்கக்கூடாது. நல்லவர்கள் இருக்கும் நாடாகத்தான் இந்தியா இருக்க வேண்டும். 
ரஃபேல்  ஊழல்  தொடர்பாக மக்களவையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று ராகுல்காந்தி கேட்டார். அதற்கு மோடி பதில் சொல்லவில்லை. நாடாளுமன்றத்துக்கே வராதவர்தான் மோடி. அதானியும், அம்பானியும் மட்டும் வாழ ஜனநாயகம் இல்லை. மோடி ஆட்சி இனி வராது. வரவும் விடமாட்டோம். 
குமரி மாவட்டத்தில் மைலாறு ரப்பர் தொழிற்சாலை உள்பட 230 ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. அவற்றை இயக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் நல்லதைத்தான் செய்வோம். இம்மாவட்டம் வளமாக போகிறது. எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். நான் உங்கள் தொண்டர்களில் ஒருவனாகத்தான் இருப்பேன். எனது ஊதியத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்கமாட்டேன். அது தொண்டர்களுக்குத்தான் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com