தடையை மீறி பேரணி: பாஜக கூட்டணியினர் 200 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்திலிருந்து தக்கலைக்கு அனுமதியின்றி பேரணி நடத்த முயன்றதாக தேசிய

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்திலிருந்து தக்கலைக்கு அனுமதியின்றி பேரணி நடத்த முயன்றதாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் 200 பேர் மீது குலசேகரம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனர். 
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்டபாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் குலசேகரத்திலிருந்து தக்கலை வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்த, இக்கூட்டணி  சார்பில் காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்ததாம். 
இதற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இதனிடையே, செவ்வாய்க்கிழமை பிற்பகல் அக்கூட்டணிக் கட்சியினர் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பிலிருந்து பேரணியைத் தொடங்கினர். 
குலசேகரம் சந்தை, செருப்பாலூர், திருவட்டாறு, வேர்க்கிளம்பி, காட்டாத்துறை வழியாக சென்ற இப்பேரணியை காட்டாத்துறை சந்திப்பில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், இது தொடர்பாக கல்குளம் வட்டாட்சியர் தாஜ்நிஷா குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
இதையடுத்து, அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தேமுதிக மாவட்டச் செயலர் ஜெகநாதன், பொருளாளர் டல்லஸ், அதிமுக ஒன்றியச் செயலர் ஜெயசுதர்ஷன் உள்ளிட்ட 200  பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com