கன்னியாகுமரியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு
By DIN | Published On : 04th August 2019 01:00 AM | Last Updated : 04th August 2019 01:00 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி பேரூராட்சிப் பகுதியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது என அதிகாரிகள், வியாபாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழும் கன்னியாகுமரியை அழகுபடுத்துவது, பராமரிப்பது தொடர்பாக தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றக் கலந்தாய்வுக் கூட்டம் கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் தலைமை வகித்தார். பேரூராட்சியின் செயல்அலுவலர் சத்தியதாஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கன்னியாகுமரியில் குப்பைகள் தேங்காத வகையில் அனைத்து கடைகளின் முன்பு மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என தனித்தனியே குப்பைக் கூடைகள் வைக்க வேண்டும்; கன்னியாகுமரி முழுவதும் 2 மாதங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது; இதற்காக தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து கடற்கரையில் காற்றை தாங்கி வளரும் வகையில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது குறித்து ஆலோசனை நடத்தி மரக்கன்றுகள் நடுவது எனவும்; கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளின் கழிவுகள் கடலில் கலக்காத வகையில் விடுதிகளில் தனியாக செப்டிக் டேங்க் அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் வரவேற்றார். இளநிலை உதவியாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.