பேச்சிப்பாறை அணையில் தூர்வாரும் வாய்ப்பை தவறவிடும் பொதுப்பணித் துறை: விவசாயிகள் ஆதங்கம்

குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையில் மண்டிக் கிடக்கும் தூரை அகற்றுவதற்கான

குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையில் மண்டிக் கிடக்கும் தூரை அகற்றுவதற்கான அரிய தருணத்தை பொதுப்பணித்துறையினர் தவற விடுவதாக விவசாயிகள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். 
குமரி மாவட்டத்தில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஜீவநாடியாகத் திகழும் பேச்சிப்பாறை அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில் 1897ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1906ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அணையாகும். 
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் கோதையாறு மற்றும் அதன்  உப ஆறுகளான  கல்லாறு, குட்டியாறு, மைலாறு, சாத்தையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக தண்ணீர் வந்து கலக்கிறது. பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு 112 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஆறுகள் வழியாக அணையில் கலந்துவிட்ட வண்டல், கிராவல், மணல் போன்றவற்றால் அணையின் நிகரக் கொள்ளளவு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இங்கு படிந்து கிடக்கும் வண்டல், கிராவல், மணல் உள்ளிட்டவற்றை அகற்றி ஆழப்படுத்த வேண்டுமென விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு  தமிழக சட்டப் பேரவையில் பேச்சிப்பாறை, ஸ்ரீவைகுண்டம் உள்பட தமிழகத்தில் 5 அணைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் நீர் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும், "வேப்கோஸ்' என்ற அமைப்பு பேச்சிப்பாறை அணையில் படிந்து கிடக்கும் தூர் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில், அணையில் 430 லட்சம் கன மீட்டர்  வண்டல், கிராவல், மணல் படிந்து கிடப்பதாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. 
இதையடுத்து, கடந்த ஆண்டு அணையில் மண்டிக்கிடக்கும் வண்டல், மணல், கிராவல் உள்ளிட்டவற்றை அகற்றுவது தொடர்பாக தொடர் ஆலோசனைகளை பொதுப்பணித்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டனர். 
இதற்கிடையே பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான 15 சதுர கி.மீ.  பகுதிகள் வனத்துறையின் புலிகள் சரணாலயப் பகுதிகளில் வருவதாகவும், இதற்கான அனுமதியைப் பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. 
தூர்வார ஏற்ற தருணம்: பேச்சிப்பாறை அணையில்,  உலக வங்கியின் அணைகள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 61.30 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல்  நடைபெற்றுவரும் நிலையில், அணையில் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளதால், அணையைத் தூர் வாரி ஆழப்படுத்துவதற்கு சரியான தருணம்  தற்போது அமைந்துள்ளது. 
இதுபோன்ற தருணம் பேச்சிப்பாறை அணை வரலாற்றில் மீண்டும் உடனடியாக அமைவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றும் கூறப்படுகிறது. இந்தத் தருணத்தை பொதுப்பணித்துறையும், தமிழக அரசும் தவறவிட்டால் அது பெரும் ஏமாற்றமாகவே அமைந்து விடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட பாசனத்தார் சபை தலைவர் வின்ஸ் ஆன்டோ கூறியது: அணைப் பகுதிகள் வனத்துறையின் புலிகள் சரணாலயப் பகுதிகளுக்குள் வருவதாக வனத்துறை கூறியுள்ள நிலையில், இதுகுறித்து அண்மையில் குமரி மாவட்டத்திற்கு வந்திருந்த தமிழக வனத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் தரப்பில் கேட்கப்பட்டது. அப்போது அவர் இப்பிரச்னை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.
எனவே, மேலும் காலம் கடத்தாமல் அணையைத் தூர்வாருவதற்கான அரிய தருணம் அமைந்துள்ள இவ்வேளையில், பொதுப்பணித்துறையும், தமிழக அரசும் விரைந்து தூர் வாரும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com