சாரல் மழை நீடிப்பு: வேகமாக நிரம்பும் குளங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில், நாகர்கோவிலில் திங்கள்கிழமை இரவு வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில், நாகர்கோவிலில் திங்கள்கிழமை இரவு வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் தப்பினர்.
குமரி மாவட்டத்தில், கடந்த வாரம் முதல் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைப்பகுதிகளிலும், மலையோரப்பகுதிகளிலும் சாரல் மழை நீடித்துவருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
இதனிடையே, மழையின் ஈரப்பதத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 7  வீடுகள் இடிந்து விழுந்தன. நாகர்கோவில் பாறைக்கால்மடத்தெரு பகுதியில், திங்கள்கிழமை இரவு ஒரு வீடு இடிந்து விழுந்ததில், அதிலிருந்த நாராயணன்(50), அவரது மகள் கார்த்திகா(20), நாராயணனின் சகோதரர் ஜான் (47), அவரது மனைவி செல்லம்மாள் (45), மேரி (72) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் சேதமடைந்தது. வீட்டை இழந்த அவர்கள் தங்களது உறவினர் வீடுகளில் சென்று தங்கினர். 
இத்தகவலறிந்த குமரி கிழக்கு மாவட்டஅதிமுக செயலர் எஸ்.ஏ.அசோகன் நேரில் சென்று பார்வையிட்டு,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியும் வழங்கினார்.  மேலும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏவும் அப்பகுதிக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி,  மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
நீர்மட்டம்: செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அணைகளில் நீர்மட்டம் வருமாறு: பேச்சிப்பாறை அணை - 16.30  அடி, நீர்வரத்து விநாடிக்கு 445 கன அடி, பெருஞ்சாணி அணை- 53.10 அடி,  நீர்வரத்து 497  கன அடி, சிற்றாறு 1  அணை- 10.17  அடி, சிற்றாறு 2  அணை-10.27 அடி, மாம்பழத்துறையாறு அணை- 41.26  அடி, முக்கடல் அணை பிளஸ் 4.20  என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.
ஆற்றில் வெள்ளம்: தொடர்ந்து மழை பெய்துவருவதால் கோதையாற்றில்  வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது. தோவாளை, அனந்தனாறு கால்வாய்களில் மழைநீர் ஓடுவதால் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் குளங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com