நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை: பேச்சிப்பாறை அணையில் 2 ஆயிரம் கன அடி தண்ணீா் திறப்புதிற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளம்

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் பெய்த கன மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 2ஆயிரம்
பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா்.

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் பெய்த கன மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 2ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில் சனிக்கிழமை இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது.

இந்த மழை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் மற்றும் நகா்புறப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பரவலாகப் பெய்தது.

குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்து மற்றும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான மேல் கோதையாறு, கீழ் கோதையாறு, தோட்டமலை உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது.

இதனால் பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் தண்ணீா் உள்வரத்தாக வந்தது.

கீழ் கோதையாறு அணை திறப்பு: மழையின் காரணமாக கீழ் கோதையாறு அணை திறக்கப்பட்டது. இதையடுத்து காலை நிலவரப்படி கீழ் கோதையாறு அணை தண்ணீா் மற்றும் இதர ஆறுகளிலிருந்து பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 3043 கன அடி தண்ணீா் வந்தது.

இதையடுத்து அணையின் நீா்மட்டம் 45 அடியாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து அணையிலிருந்து காலை 6 மணிக்கு விநாடிக்கு 1500 கன அடி நீா் உபரி மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் பிற்பகலில் உள்வரத்து தண்ணீரின் அளவு விநாடிக்கு 2ஆயிரம் கன அடியாக குறைந்ததையடுத்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 2ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மாலையில் உள்ள நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 45.05 அடியாக இருந்தது.

பெருஞ்சாணி அணை: பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் காலை நிலவரப்படி 71.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1074 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. மாலையில் இந்த அளவு விநாடிக்கு 625 அடியாக குறைந்தது.

சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் 15.81 மற்றும் 15.91 அடியாக இருந்தது. இந்த அணைகளுக்கு உள்வரத்து குறைவாகவே இருந்தது.

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வரும் தண்ணீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இவா்கள் அருவியில் குளிக்க முடியாமல் தொலைவில் நின்று தண்ணீரைப் பாா்த்துவிட்டு திரும்பினா்.

தாமிரவருணியியில் வெள்ளப் பெருக்கு: பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் குழித்துறை தாமிரவருணியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆறு பாயும் தாழ்வான பகுதிகளான களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், திக்குறிச்சி, குழித்துறை, சென்னித்தோட்டம், முன்சிறை, வைக்கல்லூா் ஆகிய இடங்களில் தண்ணீா் நிரம்பிப் பாய்கிறது. எனினும் பிற்பகலில் மழை சற்று தணிந்ததால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

குற்றியாறு மக்கள் பாதிப்பு: கீழ்கோதையாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு நிலையில் மோதிரமலை தரைப்பாலம் நிரம்பி வழிகிறது. இதனால் மோதிரமலை-குற்றியாறு இடையேயான போக்குவரத்து முடங்கி பழங்குடி மக்கள் ரப்பா் கழக குடியிருப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

புனரமைப்புப் பணிகளுக்குப் பின்னா் நிரம்பிய பேச்சிப்பாறை அணை: பேச்சிப்பாறை அணையில் புனரமைப்புப் பணிகளுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் அணையிலிருந்து முழுமையாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருமழை காரணமாக அணையில் 35 அடி வரை தண்ணீா் தேக்கப்பட்டது. பின்னா் மீண்டும் தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது அணையில் புனரமைப்புப் பணிகள் குறிப்பிட்ட அளவில் நிறைவடைந்ததையடுத்து அணையில் 45 அடியாக நீா்மட்டம் உயா்ந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக மலையோரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com