குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டுசாலை விபத்துகளில் 221 பேர் சாவு 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 221 பேர் உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 221 பேர் உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் குறித்த பட்டியலை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விவரம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 34 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில், கூலிக்காக செய்யப்படும் கொலை வழக்குகளோ, ரவுடிக் கும்பல்கள், அவர்களுக்குள் தாக்கிக்கொண்டு ஏற்படும் கொலை வழக்குகளோ, ஆணவக் கொலை வழக்குகளோ, சாதி மற்றும் மதம் தொடர்பான வழக்குகளோ கடந்த ஆண்டு பதிவாகவில்லை. கடந்த ஆண்டு பெரும்பாலும் குடும்பப் பிரச்னை, வாய்த்தகராறு மற்றும் திடீரென ஆத்திரத்தில், அறியாமையினால் ஏற்பட்ட 30 கொலை வழக்குகளே பதிவாகியுள்ளன.
மேலும், மாவட்டத்தில் 221 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 307 பேரும், 2017 இல் 267 பேரும் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக சாலை விபத்து உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், காவல் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த 89,661 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதேபோல, கார்களில் சீட்பெல்ட் அணியாமல் வந்த  23,259  பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 567 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 308 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ. 1,84,17,623 மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு 65 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018 இல் நில அபகரிப்பு மற்றும் தடுப்பு சிறப்புப் பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மனுக்களின் அடிப்படையில்,  விசாரணை நடத்தப்பட்டு ரூ. 23 லட்சம் மதிப்பிலான 35 சென்ட் நிலம் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குற்றப் பிரிவில் 1,183 மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு ரூ. 18,45,11,086 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com