நீர் நிலைகளில் கலக்கும் பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

குமரி மாவட்டத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கும் பன்றிப் பண்ணைக் கழிவுகளை தடுக்க

குமரி மாவட்டத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கும் பன்றிப் பண்ணைக் கழிவுகளை தடுக்க சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் வற்றாத  ஜீவ நதியாக கோதையாறு மற்றும் பரளியாறு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின்  வடிகால்கள், இந்த ஆறுகளில் பல்வேறு பகுதிகளில் நேரடியாக கலக்கின்றன. மேலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் பல இடங்களில் இந்த ஆறுகளில் கலந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.
மாவட்டத்தில் தற்போது பன்றிப் பண்ணைகள் பெருகி வருகின்றன. இந்த பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கழிவு நீர் ஆறுகளில் கலக்கின்றன.
குறிப்பாக பொன்மனை பேரூராட்சி பெருவழிக்கடவு பகுதியில் 4 பன்றிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் பாயும் பரளியாற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றுநீர்  மாசுபட்டு, அதன்மூலம் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த ஆற்றில் பாயும் தண்ணீர் மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதி வழியாக  திருவட்டாறு அருவிக்கரையில் பாயும் நிலையில், அப்பகுதிகளில் தண்ணீரில் குளிப்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆற்றிலிருந்து குடிநீர்த் திட்டங்களுக்கு செல்லும் தண்ணீரும் மாசுபட்டு வருகிறது.
கோதையாற்றில் கலக்கும் கழிவு நீர்: இதே போன்று திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட கைதக்கல் சிறைக்குளத்தின் அருகே செயல்பட்டு வரும் பன்றிப் பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுகள், அப்பகுதியில் செல்லும் ஓடை வழியாகப் பாய்ந்து கோதையாற்றில் கலக்கிறது. இதனால் கோதையாற்றுத் தண்ணீர் மாசுபடுகிறது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: பன்றிக் கழிவுகளுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் பரளியாற்றில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆற்று நீர் கருப்பாக நிறம் மாறி காட்சி அளிக்கிறது. அனுமதி இல்லாமல் செயல்படும் பன்றிப் பண்ணைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. உடனடியாக அவற்றை தடை செய்யாவிட்டால் ஆற்று நீர் மாசுபட்டு குடிநீர்த் திட்டங்கள் மூலம் பயனடையும் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகும் என்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் கூறியது: பன்றிக் கழிவுகள் ஆற்று நீரில் கலப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் ஆதாரங்களை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டினால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தற்போது பல மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை படிப்பினையாக கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com