ஆரல்வாய்மொழி அருகே கரடி தாக்கி முதியவர் காயம்
By DIN | Published On : 01st June 2019 10:23 AM | Last Updated : 01st June 2019 10:23 AM | அ+அ அ- |

ஆரல்வாய்மொழி அருகே கரடி தாக்கியதில் முதியவர் பலத்த காயமடைந்தார்.
குமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (65). இவருக்கு சொந்தமாக பொய்கை அணை அடிவாரத்தில் முந்திரி தோப்பு உள்ளது. தற்போது முந்திரி பழம் சீசன் என்பதால், பழங்களை சேகரிக்க வெள்ளிக்கிழமை காலை தனது தோப்புக்கு சென்றார் தேவசகாயம். அப்போது அணையின் அடிவாரப் பகுதியில் இருந்து வந்த கரடி, தேவசகாயம் மீது பாய்ந்து அவரை சரமாரியாகத் தாக்கியது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு, தோப்பிலிருந்த நாய்கள் அங்கு விரைந்து கரடி மீது பாய்ந்து சண்டையிட்டன. இதைப் பயன்படுத்தி, கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்தார் தேவசகாயம். பின்னர் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.