குமரி மாவட்டத்தில் 4 நாள்கள் தொடர் மழை: பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த 4 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பெருஞ்சாணி அணையில்

கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த 4 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பெருஞ்சாணி அணையில் ஒரே நாளில் 5  அடி நீர் மட்டம்  அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் பெய்ய தொடங்கியதையடுத்து,  குமரி மாவட்டத்தில் கடந்த  8  ஆம் தேதி தொடங்கிய மழை,  தொடர்ந்து 4 நாள்களாக மாவட்டம் முழுவதும்  பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை விடிய,  விடிய மழை பெய்தது.  செவ்வாய்க்கிழமை காலையிலும் வானம் மழைக்கான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. இதனால்,  மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டாறு சாலைகளில், மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. 
அணைப்பகுதியில் பலத்த மழை: மலையோரப் பகுதியான பாலமோர் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும்  பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறை  அணை மற்றும் சுருளகோடு பகுதியில் அதிகபட்சமாக 102.4மி.மீ.,   பெருஞ்சாணி அணைப்பகுதியில் 92.4 மி.மீ.  மழை பதிவானது. தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 5 அடியும் உயர்ந்துள்ளது.  48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி காலை 8.50 அடியாக இருந்தது. அணைக்கு 1801 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அதில் 20 அடி மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். இதனால் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி  அணையின் நீர் மட்டம் 32.20 அடியாக இருந்தது. அணைக்கு 805 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 6.59 அடியாக உள்ளது அணைக்கு 171 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 6.69 அடியாக  உள்ளது. அணைக்கு 271  கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பொய்கை அணையின் நீர்மட்டம் 8.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 42.98 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 17.85 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 50 மி.மீ. மழை பதிவானது. இதனால் அணையின் மைனஸ் நிலை குறைந்து வருகிறது.
குமரி மாவட்டம் முழுவதும் உள்ள 2  ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குளங்களில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூதப்பாண்டி-தடிக்காரன் கோணம் சாலையில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு  குழாய்  அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையினால் அந்த சாலை சேறும்,  சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
செவ்வாய்க்கிழமை காலை 8.30  மணியுடன் நிறைவடைந்த 24  மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மி.மீ.) சிற்றாறு  2   அணை 68, சிற்றாறு 1   அணை 67.8,  அடையாமடை 63, கொட்டாரம்  52, முக்கடல் அணை 51, மாம்பழத்துறையாறு அணை 50 மற்றும் குழித்துறை  46.2,  நாகர்கோவில்  45.4,  கன்னிமார்  41.4 , மயிலாடி 40.2, முள்ளங்கினாவிளை 39, பூதப்பாண்டி 38.2, கோழிப்போர்விளை 37, தக்கலை 36.5,குருந்தன்கோடு 35 ,ஆனைக்கிடங்கு 33.4,பாலமோர் 28.6,  ஆரல்வாய்மொழி  28, களியல் 19.2,  குளச்சல்18,  இரணியல் 13.2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com