கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு: தேர்தல் ஆணையர், ஆட்சியர் ஆலோசனை
By DIN | Published On : 23rd June 2019 01:05 AM | Last Updated : 23rd June 2019 01:05 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சு. பழனிசாமி, தலைமை வகித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் வார்டு மறுவரையரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தேவை, இருப்பு மற்றும் இருப்பிலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களின் தேவை மற்றும் இருப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்களுடன் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் நிலை ஆய்வு செய்து இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து ஊராட்சி கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக்களுக்கு பெல் நிறுவன பொறியாளர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தேர்தல் பொருள்களை மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில், ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஏ.ஆர். ராகுல்நாத், கூடுதல் இயக்குநர் ஊரக வளர்ச்சி ஆனந்த்ராஜ், துணை முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) சம்பத்குமார், திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் எல். காளிமுத்து, மகளிர் திட்ட இயக்குநர் ஏ.பிச்சை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் நாகராஜன், பத்ஹு முகமது நசீர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ். கண்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சையது சுலைமான், மாவட்ட ஊராட்சிச் செயலர் ரேணுகாதேவி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) சு.முத்துக்குமார், நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.