"அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்'
By DIN | Published On : 24th June 2019 10:43 AM | Last Updated : 24th June 2019 10:43 AM | அ+அ அ- |

நாகர்கோவில்: அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்தாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டுடன் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவடைந்தது. ஊதிய உயர்வு கோரி, அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கடந்த ஆண்டில் இடைக்கால ஊதிய உயர்வாக நாள் ஒன்றுக்கு ரூ.23 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இடைக்கால ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை, இறுதி பேச்சு வார்த்தையாக மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதை கண்டித்தும், நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, அரசு ரப்பர் தோட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தொ.மு.ச. இளங்கோ, விஜயன், சி.ஐ.டி.யூ. வல்சகுமார், ஐ.என்.டி.யூ.சி. அனந்தகிருஷ்ணன், முருகன், சோனியா ராகுல், பொது தொழிலாளர் சங்கம் குமரன், ஜனதாதளம் (எஸ்) ஞானதாஸ், பி.எம்.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்து சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சட்டப்பேரவைக் கூட்ட தொடரில், இது தொடர்பாக விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்படும் என்றும், அரசு ரப்பர் கழகத்தில் தற்போதுள்ள அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்தும், உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.