வெளிநாட்டுப் பறவைகள்போல் வந்து செல்வோரை கன்னியாகுமரி தொகுதி மக்கள் ஏற்கமாட்டார்கள்
By DIN | Published On : 24th March 2019 03:44 AM | Last Updated : 24th March 2019 03:44 AM | அ+அ அ- |

சீசனுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் போல் வந்து செல்வோரை கன்னியாகுமரி தொகுதி மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே அழகியமண்டபத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சரும் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறியது: கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது என் மீதும், இம்மாவட்ட மக்கள் மீதும் கட்சி வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் இத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வாக்கு அளித்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பார்கள்.
வேறு தொகுதியில் போட்டியிடுமாறு தெரிவித்த போதிலும், அதனை நான் தவிர்த்தேன். எனது வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பொறுப்பை குமரி மக்கள் கையில் அளித்துள்ளேன்.
ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பறவைகள் சீசனுக்கு வந்து செல்வதுபோன்று இத்தொகுதிக்கு வெளியில் இருந்து வருபவர்களை குமரி தொகுதி மக்கள் ஏற்கமாட்டார்கள். வசந்தகுமார் இத்தொகுதியில் போட்டியிடுவதன் மூலம், நாங்குநேரி சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிவு குறித்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானவை. 2014 மக்களவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி குறித்து கணிப்புகள் தவறாக இருந்தன.
ஊழல் குறித்து பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதுகை திரும்பிப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
ஆலோசனைக் கூட்டம்: முன்னதாக, பத்மநாபபுரம் பேரவை தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசினார்.