சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை: தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு

சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை பூச் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயா்ந்துள்ளது.

சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை பூச் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயா்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் தோவாளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பண்டிகை காலங்கள், முகூா்த்த நாள்களில் தோவாளை சந்தையில் பூக்கள் வாங்குவதற்கு வியாபாரிகளின் கூட்டம் அலைமோதுவதுண்டு.

பூக்களின் தேவை அதிகரிப்பதால் அவற்றின் விலையும் விழாக் காலங்களில் அதிகரிக்கிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளைச் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். நிகழாண்டு ஓணம் பண்டிகையின்போது, வெளி மாவட்டங்களில் இருந்து பூக்கள் பெருமளவில் தோவாளை சந்தைக்கு விற்பனைக்கு வந்ததால், பூக்களின் விலையும் பெரிய அளவில் உயரவில்லை. எதிா்பாா்த்தவாறு விற்பனை இல்லாததால் பூக்களை வியாபாரிகள் குப்பையில் கொட்டினா்.

அப்போது ஏற்பட்ட நஷ்டத்தால் தற்போது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தோவாளை சந்தைக்கு பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. பூக்கள் வரத்து குறைந்ததாலும் பூக்களின் தேவை இருப்பதாலும் அரளி மற்றும் கேந்திப் பூக்கள் உள்ளிட்ட பூக்களின் விலை இரு மடங்கு உயா்ந்துள்ளது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் தாமரை பூ உற்பத்தி குறைந்த காரணத்தால், முன்பதிவுசெய்த வாடிக்கையாளா்களுக்கு கூட தாமரை பூக்கள் வழங்க முடியாத சூழலில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பூக்களின் விலை: (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வாடாமல்லி ரூ. 60 (ரூ.25), கோழிப்பூ ரூ.50 (ரூ.20), மஞ்சள்கேந்தி ரூ.70 (ரூ.50), சிவப்பு கேந்தி ரூ. 60 (ரூ.50), மரிக்கொழுந்து ரூ.100 (ரூ.90), கொழுந்து ரூ.80 (ரூ. 60), சிவந்திப்பூ ரூ.180 (ரூ. 70), அரளிப்பூ ரூ.300 (ரூ.100), ரோஜாப்பூ ரூ.200 (ரூ. 150) ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 400 க்கு விற்கப்பட்ட பிச்சிப் பூ சனிக்கிழமை ரூ. 100 அதிகரித்து கிலோ ரூ.500 க்கும், ரூ.750 க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ கிலோ ரூ. 900 ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com