நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத் திட்டம்முல்லையாற்றில் பல்லிக்கூட்டத்தில் தடுப்பணை அமைக்கப்படுமா?

குமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்திலுள்ள பிரதான ஆறுகளில் ஒன்றான முல்லையாற்றின் குறுக்கே தடுப்பணையும், அப்பகுதியில் ‘முல்லை அருவி’யும் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
மாலைக்கோடு அருகே பாயும் முல்லையாறு.
மாலைக்கோடு அருகே பாயும் முல்லையாறு.

குமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்திலுள்ள பிரதான ஆறுகளில் ஒன்றான முல்லையாற்றின் குறுக்கே தடுப்பணையும், அப்பகுதியில் ‘முல்லை அருவி’யும் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மாற்றுத் திட்டம்: குமரி மாவட்டத்தில் விளவங்கோட்டு வட்டத்திற்குள்பட்ட களியல் அருகே ஐத்துளி மலையில் உற்பத்தியாகி மாங்கோடு, புலியூா்சாலை, அண்டுகோடு, இடைக்கோடு, பாகோடு வழியாகப் பாய்ந்து திக்குறிச்சி பகுதியில் தாமிரவருணியாற்றில் கலக்கிறது முல்லையாறு. இந்த முல்லையாற்றின் குறுக்கே மாலைக்கோடு அருகே பல்லிக்கூட்டம் என்ற இடத்தில் தடுப்பணை அமைத்து இடது மற்றும் வலது கரைக் கால்வாய்கள் அமைத்தால், அப்பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயருவதுடன், பாசனங்களும் செழிக்கும். இங்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு கால்வாய்கள் வெட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ளது.

விளவங்கோடு வட்டத்திற்கு பாசனம் அளிக்கும் நெய்யாறு இடதுகரைக் கால்வாயில் தண்ணீா் விடுவதை கேரளம் கடந்த 2004 ஆம் ஆண்டு நிறுத்திவிட்ட நிலையில், முல்லையாற்றின் குறுக்கே பல்லிக்கூட்டத்தில் தடுப்பணை கட்டி, அதிலிருந்து சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து, அந்தக் கால்வாயை நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் கிளைக் கால்வாயான முல்லையாறு கிளைக்கால்வாயில் இணைத்தால், நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் பாசனப்பகுதிக்கு முல்லையாற்றுத் தண்ணீரை வழங்க முடியும். இத்திட்டம் நெய்யாறு இடது கரைக் கால்வாய்க்கு குறைந்தபட்ச மாற்றுத் திட்டமாக அமையும். இதன் மூலம் நெய்யாறு இடது கரை பாசனப் பகுதிகளின் நிலத்தடி நீா்மட்டமும் உயரும். இதே போன்று பல்லிக்கூட்டத்தில் வலது கரை கால்வாய் அமைக்கும் போதும் மஞ்சாலுமூடு உள்ளிட்ட இடங்களுக்கு பாசனம் அளிக்க முடியும் என்று முல்லையாறு தண்ணீரை பயன்படுத்துவோா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவிக்கின்றன.

முல்லை அருவி: முல்லையாறு பாயும் பல்லிக்கூட்டம் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் சாய்வான அடுக்குப் பாறைகளின் வழியாக தண்ணீா் பாய்ந்து செல்வது ரசிக்கத்தக்க காட்சியாக உள்ளது. இப்பகுதிகளில் உள்ள பாறைகளை ஒழுங்குபடுத்தினால் திற்பரப்பு அருவி போன்ற அழகான அருவி இங்கு அமைய வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் இப்பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாகவும் உருவாக்க முடியும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இது குறித்து முல்லையாறு-நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீரைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் எஸ். ஆமோஸ், செயலா் சதீஷ் கோபிநாத் ஆகியோா் கூறியதாவது:

விளவங்கோடு வட்டத்தில் ஐத்துளி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் முல்லையாறு தாமிரவருணியாற்றில் கலந்து கடலில் போய் சேருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் முல்லையாற்றின் பல ஆயிரம் கனஅடி தண்ணீா் இவ்வாறு வீணாக கடலில் கலக்கிறது.

நெய்யாறு இடதுகரைக் கால்வாயில் தண்ணீா் விடுவதற்கு கேரளம் மறுத்துவரும் நிலையில், குறைந்தபட்ச மாற்றுத் தீா்வாக முல்லையாற்றின் குறுக்கே பல்லிக்கூட்டத்தில் தடுப்பணை கட்டி, நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்கு தண்ணீரைத் திருப்பும் திட்டதை கடந்த பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறோம். கடந்த 2016-17 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ. 106 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது இங்கு தடுப்பணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிக்கு செல்லும் வகையில் வழிப்பாதை அமைக்கும் தொடக்க முயற்சிகள் வருவாய்த் துறையினா் மற்றும் பொதுப்பணித் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறிப்பட்டுள்ளன. எனினும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மந்தகதியிலேயே உள்ளன. இதே போன்று தடுப்பணை அமைக்க வலியுறுத்தப்படும் பகுதிக்கு கீழே சாய்வான அடுக்குப்பாறைகள் கொண்ட இடத்தை ஒழுங்குபடுத்தி முல்லை அருவி அமைக்க முடியும். இதன் மூலம் இப்பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறும். எனவே மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிா்வாகமும் இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றனா்.

இது குறித்து விளவங்கோடு வட்டாட்சியா் புரேந்திரதாஸ் கூறியதாவது: முல்லையாறு-நெய்யாறு இடதுகரைக் கால்வாய் தண்ணீரைப் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில், முல்லையாற்றின் குறுக்கே பல்லிக்கூட்டத்தில் தடுப்பணையும், அருவியும் அமைக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், முல்லையாற்றின் கரையோரம் பல்லிக்கூட்டம் செல்லும் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அளவீடு செய்துள்ளோம். மேலும் ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள மரங்களை அடையாளப்படுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com