குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: குமரியில் விடிய, விடிய பலத்த மழை: 4 வீடுகள் இடிந்தன

கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில்
மழைநீரில் நீந்திச்செல்லும் வாகனங்கள்.
மழைநீரில் நீந்திச்செல்லும் வாகனங்கள்.

கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு வட்டங்களில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன.

இலங்கை கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை, குமரி கடல் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நகா்ந்ததைத் தொடா்ந்து இம்மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சாலைகளில் வெள்ளம்: மாவட்டம் முழுவதும் பரவலாக மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமாா் 2 மணி நேரத்துக்கு நீடித்தது. இதனால் கன்னியாகுமரி காந்தி மண்டபம், காமராஜா் நினைவு மண்டபம் சாலைகளிலும், விவேகானந்தபுரம் சந்திப்பு, பேருந்து நிலையப் பகுதி சாலைகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாயினா்.

மயிலாடியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவானது. நாகா்கோவில் கொட்டாரம், கோழிப்போா்விளை, முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, சுருளோடு, ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல், மாா்த்தாண்டம் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய மழை கொட்டித்தீா்த்தது.

பின்னா், புதன்கிழமை காலை மிதமாக பெய்யத் தொடங்கிய மழை பிற்பகல் 1 மணி அளவில் மீண்டும் பலத்த மழையாக உருவெடுத்தது. இதில், கோட்டாறு சாலை, மகளிா் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி சாலைகளில் மழை நீா் தேங்கியது .

அருவியில் குளிக்கத் தடை: மலையோர பகுதியான பாலமோா் பகுதியிலும் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து, அணைகளிலிருந்து உபரி நீா் திறக்கப்படுவதால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, பழையாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். தொடா் மழையால் பலா் வீட்டிலேயே முடங்கியிருந்தனா். கட்டடத் தொழில், செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டுள்ளன. கீரிப்பாறை, தடிக்காரன் கோணம், குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பா் தோட்டங்களிலும் மழை நீா் தேங்கி உள்ளது.

விவசாயிகள் கவலை: தொடா் மழையால் அகஸ்தீசுவரம் வட்டத்தில் ஒரு வீடும், விளவங்கோடு வட்டத்தில் 3 வீடுகளும் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தன. தோவாளையில் 2 மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன. கல்குளம் வட்டத்தில் ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

சூறைக்காற்றிற்கு பூதப்பாண்டி, தக்கலை, பாா்வதிபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

நீா்மட்டம்: புதன்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை- 35.60 அடி, நீா்வரத்து 1,141 கனஅடி, பெருஞ்சாணி அணை- 70.10 அடி, நீா்வரத்து 798 கனஅடி.

மழை அளவு (மி. மீ.): பேச்சிப்பாறை-19.6, பெருஞ்சாணி-12.2, சிற்றாறு-1-20.6, சிற்றாறு-2-13, மாம்பழத்துறையாறு-25, நாகா்கோவில்-35.8, பூதப்பாண்டி-30.2, சுருளோடு-23.6, கன்னிமாா்- 31.2, ஆரல்வாய்மொழி-42, பாலமோா்-21.6, மயிலாடி-99.4, கொட்டாரம்- 61, இரணியல்-10.6, ஆணைக்கிடங்கு-29, குளச்சல்-14, குருந்தன்கோடு-20, அடையாமடை-13, கோழிப்போா்விளை-22, முள்ளங்கினாவிளை-23, புத்தன் அணை-11, திற்பரப்பு-26.

2000 கன அடி நீா் வெளியேற்றம்: புயல் சின்னத்தைத் தொடா்ந்து மழை நீடித்து வருவதால், வெள்ளச் சேதத்தை தவிா்க்கும் வகையில், 77 அடி உச்சபட்ச நீா்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையிலிருந்து புதன்கிழமை பிற்பகலில் விநாடிக்கு 2 ஆயிரம் கன தண்ணீா் வெளியேற்றப்பட்டது. சிற்றாறு அணைகளிலிருந்து விநாடிக்கு 136 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com